பள்ளிக்கூட புத்தகங்களை தாண்டி நான் படித்த முதல் புத்தகம் "படிப்பது சுகமே" அதனால்தான் என்னவோ எனக்கு படிப்பது என்றுமே சுகமாக உள்ளது.
பள்ளி செல்லும் மாணவர்கள் எப்படி தங்கள் நேர மேலாண்மையை கடைபிடிப்பது, தேர்வில் எப்படி பயத்தை தவிர்ப்பது, சரியான திட்டமிடல் என்றால் என்ன? போன்ற பல வழிமுறைகளை கூறும் இந்நூல்.. தேர்வில் எப்படி அதிக மதிப்பெண் எடுப்பது போன்ற குருட்டுத்தனமான ஆலோசனைகளை கொடுக்கவில்லை. காரணம் இந்த புத்தகம் படிப்பதை தவமாக செய்ய சொல்கிறதே தவிர படிப்பதை கடமையாக செய்ய சொல்லவில்லை.
மதிப்பெண்கள் எடுப்பதற்காக படிக்கும் படிப்பு அடுத்த கணமே மறந்து போகும் என்றும், அதனால்தான் தேர்வில் பலர் தோல்வி கண்டு மனம் துவண்டுப் போவதாக இந்நூல் விளக்குகிறது. தேர்வு என்பது நமது படிப்பறிவை படித்த செய்திகளை நாம் உள்வாங்கிக் கொண்டதை சோதிக்கும் களமாக அமையவேண்டும். மாறாக தற்போது அனைவரும் தேர்வுக்காக படிக்கின்றனரே தவிர யாரு படித்ததற்காக தேர்வு எழுதுவதில்லை என்கிற கருத்தை ஆணித்தரமாக கூறும் இந்நூல் மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
மேலும் படிப்பதற்கான பயிற்சி இந்நூல் மூலம் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்.
இந்நூலின் ஆசிரியர் திரு. வெ. இறையன்பு I.A.S. அவர்கள். தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த நல்ல எழுத்தாளர் மற்றும் தேர்ந்த படிப்பாளர் திரு. இறையன்பு அவர்கள். தற்போது சுற்றுலாத் துறையில் செயலாளராக இருக்கும் இவர் காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக இருந்த பொது இவர் செய்த பணிகள் யாராலும் மறக்க முடியாது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பொற்காலம் அது என்றால் மிகையாகது. இவர் மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பார் தவிர மீனைக் கொடுத்து உங்களைக் கெடுக்கும் வள்ளல் பெருமான் அல்ல. நாம் வாசிக்க வேண்டிய பல நூல்களை எழுதியுள்ள திரு. வெ. இறையன்பு அவர்களின் "உள்ளொளிப் பயணம்" நூல் மிக அறிய கருத்துகளை நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறது. அது பற்றி வேறொரு பதிவில் காண்போம்.
நூல் பெயர்: படிப்பது சுகமே
ஆசிரியர்: திரு. வெ. இறையன்பு I.A.S.
நூலின் விலை: ரூபாய் 35/-
பதிப்பாளர்: தமிழ் புத்தகாலயம்
முகவரி: No. 34 sarangapani street,
Off: Thirumalaipillai Road
T.Nagar Chennai 600017
தொலைபேசி: (044) 28340495, 28344528

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக